Wednesday, September 2, 2009

கத்தியோடு புத்தி

வழ வழவென்று பேசிக்கொண்டே இருக்காமல் கொஞ்ச நாட்கள் கம்மென்றிருந்தது நன்றாகத்தான் இருந்தது. இன்றைக்கு சரியாக இரண்டு மாதங்கள். வசைகளும் வந்தன. விசாரிப்புகளும் வந்தன. இழப்பது நானும் என்பதால் சோம்பலை முறித்திருக்கின்றேன். ஓசியாய் கிடைக்கின்ற மாட்டுக்கும் சிலர் பல்லை பிடித்துப் பார்ப்பது வியப்பைத் தருகின்றது. நம் நடையின் போக்கை எதிரேவருபவன் தீர்மானிக்கக் கூடாது வென்பது கற்றுக்கொண்டது.

ஆயுதங்கள் ஜெயித்திருக்கின்றன என வரலாற்றில் படித்திருக்கின்றேன். அகிம்சையும் ஜெயிக்கும் என்றார்கள் பள்ளிக்கூட புத்தகத்தில். ஆனாலும் உருப்படியான உதாரணம் சொல்லத் தெரியவில்லை. பார்க்கப்போனால் ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம். அப்படியிருக்கும் வரை பொடியன்களை மொக்கைகள் ஒன்றும் செய்யமுடியாது.

குவைத் விமான நிலையத்தில் ஒரு காட்சி. ஒவ்வொரு இந்தியனும் செக்யூரிட்டி செக்கப் கவுண்டரை கடந்து செல்லச் செல்ல ஒருத்தி நாற்றம் நீக்கும் நறுமணநீர் போத்தலை பீச்சியடிக்கின்றாள். நம் வியர்வை துளிகள் அவர்களுக்கு நாறுகின்றதாம்.

ஃப்ராங்போர்ட் விமானநிலையத்தில் இன்னொரு காட்சி. ஏர் பிரான்சின் தவறுதலால் சரியான நேரத்தில் புறப்படாத விமானத்தில் பயணித்த இந்தியர்கள் நாதியற்று விமான நிலையத்திலேயே தவிக்க விடப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பல பேர் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற நாட்டினர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர கவனிப்புகள். என்னவாச்சுது? ஜஸ்ட் நிறம் மட்டுமே இதற்கு காரணமா இல்லை நம்மை நாமே நாறடித்துக் கொண்டோமா? நம் சுய மரியாதையை நாம் எங்கே தவறவிட்டோம்?

அங்கே இன்னும் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கின்றது. போனமுறை செய்தது போல இந்த முறை புதிய நடுவணை வாழ்த்தி வரவேற்க மனம் இணங்கவில்லை.

”OUR BELOVED PKP PASSED AWAY!!
FOLLOWERS PLEASE CONVEY YOUR CONDELONCES.” என ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். பச்சை தமிழராய்தான் இருக்க முடியும். என்னே attitude!!

நண்பா! நான் செத்துப்போவேன். ஆனால் அவன் என்றைக்கும் சாகமாட்டான்.

விசாரித்து எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

No comments:

Post a Comment